[one_half]சங்கீதம் வரும் வழியில்
நிழற் குடையில் கண்ணயர்ந்திருந்திருக்கிறேன்
அதனுடன் மேற்றிசை
இடியும் சேர்ந்திருக்க வேண்டும்
யாவும் நனைவது மழையிலா நாதத்திலா
போதமா அது
காலமும் இடமும் என்னை
கடந்து போயிருந்தது
பசுவின் கன்றுகள்
கிழக்குத்திசையை அழைக்கின்றன
அவர்தான் புல்வெளியை
பார்த்திருக்கச் சொன்னார்
காத்திருப்புதான்
ஒளியின் எண்ணெய் நடமிடுகிறது
ஒரு ஆறு வரையும் ஓவியத்தில்
நிலத்திரையின் உயிர் அசைகிறது
சிறு தானியம் தேடும் புட்களின்
சிறு துளி பால் என் பசியின் திரவம் அதன் துரிதம்
காற்றைக் கிழித்து கடிந்தேகினேன்
உடலே ஒரு இசைக்கருவி
அது இரைச்சலிடுகிறது
என் நிழற்குடையில் யாரும் அமரலாம்
அந்த சங்கீதத்தையும்
அங்கேதான் விட்டிருக்கிறேன்
என் பசிக்கு மிகையாக
இந்தப் பெரு நிலம் வேகமாகச் சுழல
ஒரு விண்மீன் பெருவெளியில் வீழ்கிறது
அதன் வால் பிடித்த குழந்தைகள்
நியமத்தில் உறங்கிக் கிடக்கின்றன
என் நிழற்குடையில் இன்னும்
அவர்தான் பாடிக்கொண்டிருக்கிறார்[/one_half]
[one_half_last]
[/one_half_last]