[one_half]
என் வளைவில் பறவைகளும் மலர்களும்
தனிமையில் இருக்கின்றன
அவள் உலகில் தீர்மானங்களும் பரவசங்களும்
பால்யத்தில் இருக்கின்றன
அவன் வாழ்வில் இடர்களும் குதூகலங்களும்
வழி நடையில் இருக்கின்றன
அவர் சொல்லிச் சென்ற புத்திமதி
சங்கரனின் கர்மவினை சுமந்த நாய்க்குட்டிகளாய்
பின் தொடர்கிறது
கோவில்களில் தானியங்களை எலிகள் கொறிக்க
வெண்ணை எறிபட்ட துர்க்கை
வெப்பம் களைகிறாள்
நான்கு நாட்கள் பயணம்
நாற்பத்தெட்டு நாட்கள் உபவாசம்
உல்லாசத்தை கொண்டு வருகிறது மழை
உனக்கு கிழக்கே சகுனம்
எனக்கு மேற்கே நற்செய்தி
அவனுக்கு தெற்கில் பெண்கிடைக்கிறது
எல்லாவற்றுக்கும் வடக்கேதான் புண்ணியம்
ஆத்திகனும் நாத்திகனும்
தர்க்கத்தில் பட்டினி கிடக்கிறார் கடவுள்
காற்றழைக்குள் கூடத்தான் சோறு விளைகிறது
மனமே காரகனிடத்தில் காலமாயிரு
[/one_half]
[one_half_last] [/one_half_last]