[one_half]குளிர் காலத்தின் முழுநிலவு நாள்
அது ஒரு வன்னி மரத்தின் மேல்
ஒற்றைக் கண் பார்வையை செலுத்துகிறது
வெண்ணிறம் பாய்ந்த மதில்கள்
எனது கண்ணின் கருவிழியை
இடவலமாய் அசைத்தேன்
மதி நடனமாடுகிறது
அந்தகாரத்தின் தனிவிளக்கு
காலம் தவறவிட்ட கைப்பந்தம்
மறு சுற்றில் முகம் காட்டும்
அதனுடன் என்னுறவு விதையுறக்கம் போன்றது
அப்படித்தான் அது என் மனநாடகத்தின் கதாபாத்திரம்
ஒரு கார்காலத்தில் என்னுடன் அது
வெகுதூரம் வந்தது
ஒரு காதலியின் தனித்துவமான நடை
என் பால் நினைவின் ஒளியோடை
மனிதர்களிடையேயான இரகசியத்தை
சூரியனிடம் எடுத்துச் செல்லவே
இவ்விரவில் அது முணுமுணுக்கிறது
நானும் இம்மாத வரவு செலவினங்களை
தொகுத்து அனுப்பிவிட்டேன்
இப்போது என் போர்வைக்குள்
உறக்கத்திற்காக எனக்கும்
மேற்கில் சரியும் அந்நிலவுக்கும்
ஒரு வான ஒப்பந்தம்
அது இரண்டு கண்களைப் போன்றது[/one_half][one_half_last][/one_half_last]