[one_half]
பழையன கழிதலும்
புதியன புகுதலும் இதோ
புங்கை மரங்கள் துளிர்க்கின்றன
யார் சொல்ல யார் கேட்கிறார்கள்
ஓராயிரம் நாடகங்கள் கண்டது இந்நிலம்
உன் துயரத்தின் முகபாவம்
என் வளர்ப்புப் பிராணியிலும்
மோசமானது
சில நல்ல சொற்களை
உனக்காக வைத்திருக்கிறேன்
நீ கைமாற்றித் தந்த மண் பாத்திங்கள்
உடைந்து போகாதபடிக்கு
என்னிடம் உள்ளது சில பூங்கொத்துகள்
இக்காலத்திய சினேகம்
அருகம்புல்லை வேரோடு பறிப்பதுபோன்றது
எனக்கு வேறு வேலை இருக்கிறது
வெயில் காலத்தின் புங்க விதைகள்
மணம் வீசும் சிறு நிலத்தில்
உனது துயரத்தைப் போன்றதொரு
வாழ்நாளை கடக்க விரும்புகிறேன்
உனக்கான சொற்களை
மண் பாத்திரத்தில் எடுத்துக்கொள்.[/one_half]
[one_half_last][/one_half_last]