[one_half]கரையில் நின்று
கடல் நீரை கணக்குத் தீர்க்கும்
பழம் பெண்ணொருத்தியின்
நிகழ்காலம்
என்னிடம் வழிநடையில்
ஒரு முறையீடு செய்தது
போன மழைக்காலத்தில்
அடிவானத்தில் நின்றிருந்த
மேகத்தின்மீது சத்தியம் செய்து
கடல் நடுவே அழைத்துப் போவதாகச் சொன்னவன்
நேற்று வரை வரவில்லையாம்
என்ன செய்யவென விரல் உதறினாள்
நான் வழக்கொன்றை எழுதினேன்
இடிஇடித்து மழைபெய்ய
சட்டத்தின் கதவுகளைத் தட்டினேன்
நியாயம் கேட்க வந்தவர்கள்
நிகழ்காலத்திடம் என்ன சாட்சி இருக்கிறது
என்றார்கள்
மேகத்தை அழைப்பதாகச் சொன்ன
நிகழ்காலம் அடிவானத்தைப் பார்க்க
உச்சிவானம் நிர்மலமாய் இருந்தது
உன்மேகம் நகர்ந்துவிட்டது என்றேன்
மழை நனைந்தவர்களைப் பார்த்து
நீங்கள்தான் என்னை கடல்நடுவே
அழைத்துப் போக வேண்டுமென
கத்தினாள்
நான் குற்றத்தை ஒப்புக்கொண்டேன்[/one_half]
[one_half_last][/one_half_last]