[one_half]கோடையின் சவுக்குமரப் பாதையில்
அந்த நீர் நிலைக்குப் போய்
அந்திவரை மேகங்களைப் பார்த்து நிற்கையில்
தென்றலோ
புழுக்கமோ
முட்புதர்களில் பறவைகளின் சிறகடிப்பு
பாதரஸம் தழும்பும் மஞ்சள் வண்ண ஏரி
சலனித்து மின்ன
உருவம் வடிவமிழக்கும் இருளில்
அந்த ஓவியனைத் தேடுகிறேன்.
செந்நிறம் பொங்கும் கிழக்கில்
தூரிகையால் அதைச் சற்று
நிறம் குன்றச் செய்யவேண்டும்
ஏரியின் மீது ஆவியாய் மிதக்கும் வெப்பம்
கச்சிதமாகத் தீட்டப்பட்டிருக்கிறது
பார்வையாளனாக
அவ்வோவியத்தின் இருளில் இருப்பதை
அக் கோடைக்கால ஓவியன்
அறியும்படி செய்யவேண்டும்
அப்பொழுது
ஏரிப் பறவைகள்
என்முன் எழும்பிப் பறந்து செல்லக்கூடும்[/one_half]
[one_half_last][/one_half_last]