[one_half]தாய் வளர்த்த தாவரங்கள்
காய்களையும் மலர்களையும்
முற்றத்தில் பரத்துகின்றன
ஒரு வனத்தையே உண்டாக்கிவிடும்
அவள் கைராசி பிரசித்தமானது
பறவைகள் வந்தமரும் அதன் கிளைகளில்
தன் கொடிவழி உறவை
இனம் காண்பாள் போலும்
மகப் பேறுரும் மகளுக்கு மருந்திற்கென
அவள் வளர்க்கும் ஒரு மரம்
ஆடுகள் தின்னும் கீரைகளையும்
பாத்தியிடுகிறாள்
எப்போதும் விதைகளைத் தேடியலையும் அவள்
என் வருகையினைக்கூட
ஒரு தாவரம்
துளிர்த்துவிட்டதாகத்தான் காண்பாள்
அவள் நிலத்து நீரை காலால் உற்ஞ்சி
அவற்றின் மீது தெளிக்கிறாள்
முதிர்ந்த நிலையில் காலத்தை கடத்தும்
அவள் ஒரு மாணிக்கக் கொடிபோல
முற்றத்தில் ஒளிர்கிறாள்
தாவரம் எனும் மொழி
தாயாய் மணம் வீசிக்கொண்டிருக்கிறது.[/one_half]
[one_half_last][/one_half_last]