[one_half]இந்த நகரத்தின் ஈசான்ய மூலையில்
நமது கட்டில் மிதந்துகொண்டிருக்கிறது
சில நேரம் சூரியக் கதிரும்
பலநேரம் நிலவொளியும்பட்டு
மேகங்களுக்கிடையே அடிக்கடி
மறைந்து விடுவதை நீயும் கண்டிருப்பாய்
அது இறங்குமிடம் ஒரு அடர்ந்த காடாக
அருகில் ஒரு நதியுன் சலசலப்பு
இருக்க வேண்டுமென்பது உன் பிராத்தனை
நான் அதனருகில் சில புள்ளினங்களையும்
அலையும் விலங்குகளையும் வேண்டியுருப்பேன்
உண்மையில் நறுமணமூட்டப்பட்ட ஒரு அறை
இன்னும்கூட வசதியானது என்பேன்
மிதக்கும் கட்டிலை அது முழுவதுமாக
உள்வாங்கி ஆறாத மனப்புண்களின்
சயனத்தை நமக்கு வழங்கவும்கூடும்
அந்நேரம் அதன் கால்களிலிருந்து ஏதேனும்
பதுமைகள் உயிர்த் தெழுந்து நமக்கிடும்
நிபந்தனையுடனான விடுகதைகளை
விடுவிக்க இயலாமல்
கூடலற்றுப்போன நமது திகைப்பு
ஒரு தத்துவமாகி வெளியுல் உறைந்து போகலாம்
இத்தனைக்கும் பிறகு
மிதக்கும் கட்டிலைத் தரை
இறக்கியது யாரென்ற
விவாதம் மட்டும் நமக்குள் தொடங்கிவிடக் கூடாது
என்பதுதான் செல்லமே
என்னுடைய நித்திய பிராத்தனை.[/one_half]
[one_half_last][/one_half_last]