[one_half]அகாலத்தில் இசைத்துக்கொண்டிருக்கும்
உடைந்த நிலவின் நகக் கண்களில் இருந்து
உனக்கான ஒரு பாடலை உருவாக்குகிறேன்
மிக முந்தைய
ஒரு தலைமுறையின் பிரிவாற்றாமைப் பாடலாய்
காதல் நிறைந்தவனின் பின்மாலைக் கழிவிரக்கமாய்
மரணங்களால் விரைவுபடுத்தப்பட்டும்
முழுநிலவையும் தனக்குள் தக்கவைக்க
தத்தளிக்கும் அப்பாடலில்
எனது நிலக்காட்சி தொலைவில் தெரியும்
சிறுசிறு வீடுகளின் விளக்கொளியைப் போல்
தூக்கமெழுப்புகிறது
உன் சருமத்தில் ஊர்ந்து திரிந்து
பரவசம் கண்ட என் நகக்கண்கள்
வளர்ந்து பௌர்ணமி நிலவாய்
உன் முற்றத்தில் நிற்கும்போது
அகாலத்தில் கடலலைகள் அப்பாடலை
உனக்கான கொந்தளிப்புடன்
இசைக்கத் துவங்கிவிடும்[/one_half]
[one_half_last][/one_half_last]