[one_half]குழந்தைகளைத் தூர தேசங்களுக்கு
அவர்களின் கனவுகளோடு
இழுத்துப்போகின்றன இரயில்கள்
எருக்கஞ்செடிகள் அல்லது
ஒரு பசு மாட்டின் வயிற்றின் கீழ்
அமர்ந்து அதன் பெட்டிகளை
எண்ணிக்கையுடும் போது
குழந்தைகளின் காதுகள்
விடைத்துக்கொண்டு விடுகின்றன
அவர்களின் ஈய நாணயங்களை
இரயில் சக்கரங்கள் ஒரு வட்டக் கத்தியாக்கி
தரும்போது உற்சாக சப்த்ங்களுக்கு
இரயில் ஒரு வீரிடலைப் பரிசாகத் தருகிறது
அதன் கதவுகளில் அமர்ந்திருப்பவர்கள்
கைகளை அசைக்கிறார்கள்
ஒரு கைகாட்டி மரம் சட்டென்று எழுகிறது
தண்டவாளங்களில் ஓலமிட்டு ஓடும்
குழந்தைகள் இரயிலைப் போலவே
ஒருவர் ஒருவராய் அணி வகுக்கிறார்கள்
நெடுந்தூரங்களைக் கடக்கவும்
பழகும் அவர்கள்
தடம் புரண்டு விழும்போது
கைகாட்டி மரங்கள் மௌனமடைகின்றன
காலம் தன் கைகளை அசைக்கிறது[/one_half]
[one_half_last][/one_half_last]