[one_half]
இதற்கு முன் என் காதலை
பத்திரப்படுத்தியவளிடம்
எனது கபடமின்மையைச் சேகரித்தவளிடம்
மந்திரவாதியின் உயிர் இருக்கும்
கிளிக்குஞ்சைப் போல்
எனது அன்பை விட்டிருக்கிறேன்
அவள்தான் சொன்னாள்
நீ இன்னும் மாசடையவில்லை
உனது கண்களின் வஞ்சகமின்மையை
நான் அறிவேன்
நீ திரும்புவாய் ஒரு தேவதையின்
தாலாட்டிற்கு
ஒரு மலரின் அழகை ஆன்மீகமாய்க் காண்பதற்கு
இன்னும் உனது கால்களில் நோவு அகலவில்லை
அழைப்புகளில் வஞ்சகம் மறையவில்லை
உனது வானம் மழையை மையமிடவில்லை
நதிகளிலோ அசுத்தங்கள் கலக்கின்றன
இருப்பினும் திரும்புவாய்
பறவைகளின் பாடலுக்கு
நெருப்பின் பழம் தன்மைக்கு
அல்லது ஒரு கனியின் உந்துதலுக்கு
கனவுகளில் அவள் கூவுகிறாள்
திரும்புவாய் உன் ஜீவிதத்திலிருந்து
ஒரு தாய்மைக்கு
அதனின்றும்
பத்திரப்படுத்துவேன் உன் காலத்தின் களங்கமின்மையை
பால்மணம் வீசும் உன் முத்தத்தையும்
[/one_half]
[one_half_last][/one_half_last]