[one_half]
வெகுநாட்களுக்குப் பிறகுதான் தெரிந்தது
நான் ஒரு தொலைபேசி எண்ணாய் இருக்கிறேன் என்பது
உறக்கத்தின் மத்தியில் நடுநெற்றியில்
சம்மட்டியால் அடிப்பது
ஒரு இனிய குரல் எப்படி பிசாசைப் போல அலறும்
மேலும் அது என் காதுகளைப் பிடித்து
தலைகீழாக வேறு தொங்கும்போது
உறங்காத என் இமைகளில் இருந்து
காதலின் சொற்கள் வெளியேறியபடியே இருக்கின்றன
அதனுடன் கொஞ்சம் வசவுகளும்தான்
எனது பணிமேசையில் குதித்தாடும்
அழைப் பெண்களின் ஓசை
பாறைகளைச் சல்லிகளாக்கும்
இயந்திரத்தினுடையதிலும் சத்தமானது
பழைய முத்தங்களை இப்போதும்
மறுபரிசீலனை செய்கிறேன்
அதீதச் சிணுங்கல்களுடன் சில செல்லம் கொஞ்சுகின்றன
தாவரங்களைப் பற்றியும் மலைச் சரிவுகள் குறித்தும்
பணிமாற்றம் குறித்து கவலை மறைத்து
மகிழ்ச்சி தெரிவிப்பவை சில
குரல்களின் வலையில் அகப்பட்டிருக்கிறது எனது உடல்
ஊடுருவும் பார்வைக்கு முன்பாக
எனது தொலைபேசி அலறுகிறது
எனது எண் எல்லாத் திசைகளிலும் இயக்கப்படுகிறது
எதிரே உருவமற்று என்னை ஆணையிடும்
குரல்களுக்கு முன்னால் எனது எண்
வெளிகளின் இணைப்பற்ற இடைவெளிகளில்
மௌனமாய்ப் பதுங்குகிறது
[/one_half]
[one_half_last][/one_half_last]