[one_half]தூரம் காட்டி நீளும் சாலைகளில் இருந்து
எனது குறிப்புகளை எழுதுகிறேன்
மிகத்துல்லியமாக விரைவில்
சென்றடையத்தக்க வழிமுறைகள்
ஏதும் அதில் இல்லை
நல்ல உணவுகள் கிடைக்குமிடம்
தங்கிச்செல்லும் விடுதிகள் குறித்த
தகவல்களும் கிடையாது
மோசமான சாலைகள் பற்றிய
எச்சரிக்கையும் இல்லை
திமிறி எழுந்தோடும் மேகங்கள்
பாதைகளில் சுருண்டுறங்கும் பாம்புகள்
மாலை நேரத்தில் பாதரசப்படுக்கையாய்
மின்னும் நீர்நிலைகள்
ஒருபோதும் குறிப்புணர முடியாத
அந்தியின் சலனம்
வேகத்தில் அனைத்தும் பின்புறமாய்
விரைந்தோடும் புதிர்
உடன் பயணிக்க விரும்பிய
பெண்ணின் துணையற்ற வெற்றிடம்
எழுத முடிவது
கைவிட்டுப்போனவை
பற்றிய ஞாபகங்கள் மற்றும்
ஒரு துண்டு உலகம்
[/one_half]
[one_half_last][/one_half_last]