[one_half]நீங்கள் அப்படி நடந்துகொள்ள கூடியவர்
என எளிதில் யாரும்
குற்றம் சொல்லமுடியாதபடிக்கு நடத்தையுள்ளவர்
மேலும்
தவறுகளின் பக்கம் உங்களை யாரும் கண்டதுமில்லை
உங்களின் பணித்திறன் மீதான
நம்பிக்கை அனைவருக்குமுண்டு
பெயர் சொல்லக்கூடிய சில வேலைகளை
செய்து முடித்தது பற்றி
இன்னும் சிலர் பெருமை பேசுகின்றார்கள்
வன்முறைக்கெதிராக எழும் உமது குரல்
ஊரெங்கும் பிரசித்தம்
குருதிக் கறைபடிந்து பிசுபிசுக்கும்
உங்கள் கைகளை யாரும் பார்க்கவில்லை
மலர்களின் நறுமணத்தில் சாறு எடுப்பதாக
வனத்தை அழித்தது பற்றி
ஏனிப்போது அக்கறை
நடந்து முடிந்துவிட்டது அனைத்தும்
இப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது
ஒரு ரோஜா மலரை சட்டையில்
பொருத்திக்கொண்டு
ஒரு சிறுமியோடு புகைப்படம்
எடுத்துக்கொள்வது மட்டும்தான்[/one_half]
[one_half_last][/one_half_last]