[one_half][/one_half]
[one_half_last]
இந்த வருடத்துப் புதியவர்கள்
இன்னும் அறியாதிருக்கும் ஒன்றைச் சொல்லி
என்னிடம் நேற்றைப் பற்றியும்
வழக்கமான பலவற்றையும்
கேட்டுக் கொண்டார்கள்
மிகப் பழங்காலம் வரை நீண்ட பேச்சிலிருந்து
ஒருவரின் வீட்டருகே நீர் ஊற்று கிளம்பியிருப்பதையும்
நரிகள் வந்துபோகுமிடத்தில் இருந்த
குன்று ஒன்றில்
புதிய கோவில் வந்திருப்பதாக மற்றொருவரும்
சொன்னார்கள்
தேனீர் ஆறிக்கொண்டிருந்தது
இன்னும் சில மாமாங்கங்களில்
இந்தத் தலைமுறைகளின் திசைகள், திணைகள்
மாறிவிடும் என்றும் நான் சொன்னேன்
மற்றொருமுறை வருவதாகவும்
இம்முறைச் சந்திப்பு பயனுள்ளதாகவும்
இருந்தது என புன்னகைத்து விடைபெற்றார்கள்
அடுத்த வருடத்து புதியவனாக இருக்க
இப்போதிருந்தே பழகிக்கொள்ள நினைத்தேன்
[/one_half_last]