[one_half]அடர்ந்து விழும் நீர்வீழ்ச்சியில்
எனது கிண்ணத்தின் கொள்ளளவு
உனது முத்தத்தின் சில மில்லிமீட்டர்கள்தான்
ஆயினும் என் உடலில் தாவரங்கள்
வளர அதுபோதும்
இருப்பிடம் தேடியலையும் குருவிகள்
உனது அன்பின் பாடலை
கனிகொத்தி மிச்சம்வைத்துப் போகின்றன
அறையில் அதன் பழவாசனை
பிறகு திரைச்சீலைக்கு வெளியே
காட்டின் கிசுகிசுப்பு
அதில் உன் இதழ்களின் பச்சை வாசனை
வரவேற்பறையை சுத்தமாக வைத்திருப்பவன்
உனது உரையாடலை
ஸ்பரிசத்திற்கு நகர்த்துபவன்
அல்லது உனது படுக்கையறை
ஆழ்ந்த தத்துவங்களில் இருந்து
என்னை ஒரு இளம்மதுவிற்கு நகர்த்தும்
ஆயினும் அருவி என்ற சொல்
என் தேகம் எங்கும் விழுந்து
என் கிளர்ச்சியைக் கடக்கும்போது
என் தாவரங்களில் இருந்து
ஒரு காட்டு மலரை உனக்கு நீட்டுவேன்
சமதளத்தில் நீரோடையாய்
அம்மலர் சூடி நீ நெளிந்து செல்கையில்
வந்தமர்வேன் அதில் ஒரு வண்ணத்தியாய்.
[/one_half][one_half_last][/one_half_last]