[one_half]தூரம் என்பதும் காலம் என்பதும்
கனவு என்பதும் கண்டு கேட்டு
களிப்புறுவதும் அன்பின் நிலமென
துணிந்தேன் வசித்தேன் அன்பே
திறக்கமுடியாத உலகத்திலிருந்து
உன் பெயரைத் தவறவிட்ட பறவையென
நானலையும் கானகம் முழுவதும்
உனது நீர் விளையாட்டு அதன் வானவில்
பிறகொருநாள் அறுந்துபோன பட்டமென
மிங்கம்பிகளில் படபடத்த இதயம் யாருடையது
பெயரில் என்ன இருக்கிறது என்றாய்
அனுதினமும் உனது சின்னஞ்சிறு உலகத்தை
எனது பெயரால் திறக்கும்
உன் வலிமுற்றிய இரகசிய சமிக்ஞைகள் கண்டு
என் சம்பிரதாயம் அதிர அதன் பறவைகள்
வெளி முழுதும் குழப்பத்துடன் உயிர்பற்றி
சடசடத்து வீழ்ந்ததை
எப்படிச் சொல்வேன்
அன்பின் நிலம் முழுக்க துரோகமெனில்
என்ன செய்வது
நெடுநாளாய் உனது மௌனச்சிறையில்
ஸ்பரிசமற்றுக் கழியும்
ஆறுதலற்ற ஆயுட்காலம் கண்டு
கண்கசிய திடுக்கிட்டு நிற்கிறது
எனது நிகழ்காலம்.[/one_half]
[one_half_last][/one_half_last]