[one_half]நீரோடைகளின் அருகே சிறு புல்லென
நிலவின் அருகாமையில் நட்சத்திரங்களென
ஒளிரும் மலைமுகப்பில் உலவும் மேகமென
உன்னருகே இருக்க முடியாதபோதும்
உனக்களித்த சொல்லில்
நீ தேர்ந்தெடுத்ததை
நான் வாசித்து
உனக்குச் சொன்ன என் சொல்லில்
நீ புரிந்துகொண்டது
நிலவு புல் நட்சத்திரம் நீரோடை
மற்றும் மலைமுகட்டுடன் கூடிய மேகம்
மட்டுமே என்றால்
உன் தனிமை கொடுமையானதுதான்
என்னருகே நீ இல்லாதபோதும்
அவையெல்லாம் நீ எனக்களித்த
முதல் முத்தத்தின் ஞாபகங்கள் என்றேன்
உனக்களித்த சொற்களில்
கவித்துவம் அதிகரித்துவிட்டது என்கிறாய்
மீண்டும் உன் முத்தம்தான் காரணம் என்கிறேன் நான்.[/one_half]
[one_half_last][/one_half_last]