[one_half]உனது காதலின் ஓடுபாதையில்
வழக்கமான ஒரு காதலனாய்
சிறிய பூங்கோத்து ஒன்றுடன்
மண்டியிட்டிருக்கிறேன்
நீ புகைவண்டிக்கான
அவசரத்தில் இருப்பாய் போலும்
பிறகும் இதழ்களை ஒரு காலை முத்தத்திற்காய்
தயார் செய்திருக்க மாட்டாய்
உனது நூற்றாண்டு துவங்கி இருக்கிறது
எனக்கது தன் கடைசி நாட்களை
கவிழ்த்துக் கொண்டு விட்டது
இன்னுமொரு திருப்பத்தில் என்னைக் காண்பாய்
படபடக்கும் மார்புகளுடன்
ஆசையற்றுக் கடப்பவளைப் போல
எனது காலவதியாகிப் போன
மெலிந்த ஒரு கணத்தில்
விட்டுப் பிரியும்படி
உத்திரவாதங்களற்ற பார்வையுடன்
மிகக் கறாராய்
இந்தப் பூங்கொத்துகளைப் பெற்றுக் கொள்
மரங்களற்ற
மரங்களடர்ந்த பின்னணியில்
ஒரு வாழ்த்து அட்டையின்
உறைந்த காட்சியைப் போலவாவது
உனது நூற்றாண்டின் முகப்பில்
அது இடம்பெறட்டும்.[/one_half]
[one_half_last][/one_half_last]