[one_half]
வெப்பம் தாளாமல்
எனது குளிரூட்டப்பட்ட அறையில்
நுழைபவர் அமைதியடையும் வண்ணம்
காத்திருக்கிறேன் பேசுவதற்கு
அவர் சிறிது நடுக்கமுற்றவராகவும்
காதுகளில் இரைச்சல் கொண்டவராகவும்
இருக்கிறார்
முன் தயாரிப்பில் இருந்து பேசத் துவங்குவதை
தவிர்த்து மிகச் சாதாரணமாக
ஆனாலும்
இக்குளிர்அறை மிகக்கொடூரமானதாக
இருப்பதைச் சொல்லவும் விரும்பாமல்
தன் வருகையின் தீராத்துயரம் மற்றும்
வன்மமான ஒரு சிரிப்புடன் ஆரம்பிக்கும்
அவரது உரையாடல்
பூடகமானதொரு தொனியில்
என்மீதான ஒரு கட்டளையின் அவதானிப்பாக
அத்துடன் சாகசமான புத்திசாலித்தனத்தையும்
கொண்டிருக்கும்போது
அவரது பயணம்
இருப்பு நிலம் மற்றும்
வஞ்சினமூட்டப்பட்ட அவரது அகவாழ்வு
பற்கள் கிட்டித்துக்கொள்ளும் பேச்சு
மகிழ்ச்சியான ஆரவாரத்தின் போது
கண்களில் மின்னும் கபடம்
பிறகு
உடல் சூட்டிற்காகவும்தான் அவர் நெடுநாள்
என்னுடன் நட்பாய் இருந்து வருகிறார்
நல்லது
இந்தக் குளிர் அறைக்கு வெளியே
ஒரு வெறுமையான நட்பின் காலத்தில்
என்னைச் சந்திப்பதில்
அவருக்கு என்ன விருப்பம் இருக்கக் கூடும்?
[/one_half]
[one_half_last]
[/one_half_last]