[one_half]
சொல்லி முடிக்க வேண்டிய இடத்தில்
துவங்கித் தொலைப்பது என் வழக்கமாகிவிட்டது
ஒரு கிளை முறிந்து மரம் கடக்க வேண்டும்
ஒரு கனி பிழிந்து சாறுண்டு
நினைவொழிக்க வேண்டும்
முகத்தில் அறைந்தாற் போல ஒரு வார்த்தை
எந்நாளும் அற்றுப்போக வேண்டும் உறவு
கோடலிகளும் கிளிகளும்
சாத்தானும் செய்ததை
அல்லது எனக்கு ஒரு பிராயம் வந்திருப்பதை
காலடியில் தரை வெகு நீளமாய் இருப்பதை
பின்புறம் திரும்பும்போது
ஒருவர் கண்ணீர் உதிர்ப்பதை
அனைத்தும் நினைவற்றுப்போனதை
பேசுவதற்கு இப்போது யாரும் இல்லை
ஒரு சுற்று தொடங்கி எதுவும்
மறு சுற்றில் முடிந்து விட வேண்டும்
நாள் துவங்கியபோது
எழுந்து போய்விட்ட ஒரே ஒருவனை நினைத்து
பெரிதாய் துவங்குகிறது எனது துக்கம்
அடிவானத்தில் விம்முகிறது அந்தி
எனது தரையின் பின்புறம் திரும்பிப் பார்க்க
அதற்கு முன்பே ஒருவர்
என்னை நோக்கித் திரும்பியிருந்தார்.
[/one_half]
[one_half_last][/one_half_last]