[one_half]
ருசியற்ற அப்பத்திற்கு சண்டையிடும் பூனைகள்
பங்கிடும் குரங்கிடமிருந்து
வெறுமையாக மீள்வது
ஒற்றை ரோஜா மலர் நடை பாதையில்
வாடிக்கிடப்பது
வீதியோர மின்கம்பியில் காற்றாடி சிதலமாகிப் படப்படப்பது
கார் சக்கரமொன்று புழுதியில் எரிவது
எனது காலுறைகள் அணியத் தோதற்று
விரிந்து போனது
அனைத்தையும் ஒரே சமயத்தில் சொல்ல
இந்த நாள் கடந்து போகிறது
காலம் காற்றாலை முள்ளில் உலர்வதையும்
மற்றொன்றில் துளிர்ப்பதையும் கண்டேன்
புதிய நறுமணம் கொண்டு
வரவேற்பாளினி இந்த முறை
செயற்கையாகச் சிரிப்பதை நிறுத்தியிருந்தாள்
அவளது பூனைக்கு என்னைப் பிடித்திருக்கலாம்
நான் எதற்கும் சண்டையிடவில்லை
இன்னொரு நாளும் இப்படி
இருக்கப் போவதில்லை
[/one_half]
[one_half_last] [/one_half_last]