[one_half]
அவன் சிங்கத்தின் தலையில்
ஓங்கிக் குட்டும்போது
அதன் கருமணிகள் ஒரு கணம்
வெண்மையாகி மீள்கிறது
உறக்கத்திலிருக்கும்போது குட்டுவது
அதைக் கொட்டாவிவிட வைக்கிறது
முகத்திற்கு முன் பறக்கும் ஈக்களை
வாய்திறந்து பிடிக்கச் செய்கிறது
இப்போது அவன் உச்சந்தலையில்
நங்ஙென்று கொட்டிய ஒலியில்
அது பரிதாபமாய் தலை குனிந்து
அவனைக் கீழ்பார்வை பார்க்கிறது
மற்றுமொரு குட்டிற்குக் கை ஓங்கும்போது
அது சற்றே முகம் நிமிர்ந்துவிட
மூக்காந்தண்டையில் விழுந்த அடிக்கு
பெரும் உறுமலுடன் கைகளைக் காற்றில் வீசி
சீறிப்பாய முயல
அவன் ஒரு வளையத்தை நீட்டுகிறான்
அத்துடன் சவுக்கால் ஒரு சொடுக்கை
பளீரென அவன் சுழற்றிய போது
முதுகுத் தண்டின் சிலிர்ப்பில்
அதன் இதயம் நடுங்குவதைக் காணமுடிந்தது
மீண்டும் ஒரு குட்டு
[/one_half]
[one_half_last][/one_half_last]