[one_half]யுத்த நிதிகளில் இருந்து
ஒரு கால் ஊனமுற்றவனுக்கு
அல்லது ஒரு கைம்பெண்ணுக்கு
வழங்கப்படும் எதிர்காலம் பற்றி
நான் யோசிக்கிறேன்
திருமணத்திற்கு உதவி செய்யும்படி
வாசலில் தட்டேந்தி நிற்கிறாள் ஒரு இளம்பெண்
எனது உலகம் என் சிந்தனைக்கப்பால்
தாறுமாறாய் சலனமடைவது யூகிக்கவியலாதது
ஒரு பொய்யைச் சொல்லி நேற்றைக் கடத்தினேன்
ஒரு பொருளைத் தொலைத்து
புதிய நூலொன்றைக் கண்டுபிடித்தேன்
ஒரு அழுகையைச் சொல்லி
யாரேனும் என்னை குற்றப்படுத்திவிடுகிறார்கள்
போன பிறவியில் நான் பிறந்தேன்
இருந்தேன் எதிர்காலத்தில் ஒரு கவிஞனாய்
நாளை சந்திக்கவருவதாய்ச் சொல்லி
செல்பவர்கள் பற்றி கவலைப்படுகிறேன்
எனது நீண்டகால அலுவலகமோ மிச்சமிருக்கிறது
உள்ளேயும் வெளியேயும் அது
என்னை கலைத்துப் போட்டபடி இருக்கிறது
ஆடை மாற்றும் சந்தர்ப்பங்களுக்குள்தான்
எல்லாம் மாறிவிடுகிறது
தன் திருமணத்திற்கு பத்து ரூபாய்
போதுமென்று அவள் போய்விட்டாள்[/one_half]
[one_half_last][/one_half_last]