[one_half]வானம் வரையும் ஓவியன்
சிறு பறவைகளை தொடுவானத்தில் வைக்கிறான்
அதுபோலவே
வயல் வெளியில் செம்மறி ஆடுகள்
புல்லென்ற பசுமையினிடையே ஒரு கடும்பாறை
சாலையென்றால் வாகனங்களும்
கடலென்றால் கப்பல்களும்
ஆறென்றால் தூரத்து மலைகளும்தான்
சூரியனை முடியவில்லை என்றால் என்ன
நிழல்களும் கதிர்களும் இருப்பதில்லையா
எல்லாம் நிகழ்ந்தபிந்தான் கேட்டுக் கொண்டேன்
அதிகம் பிரியமானவர்களுடன்
முரண்பாட்டின் கண்ணீரற்று அல்லது
பெருமிதத்தின் பரவசங்களற்று
தனியாக மிகத்தனியாக
ஒரு புகைப்படம் இருப்பதில்லை யாரிடமும்
காலங்களின் மீதான உத்திரவாதம்
நழுவிச்செல்லும் குளிர்கால நிலவைப்போல அல்லது
அந்நியமாகிப்போன ஒரு தந்தையைப்போல
அனைத்தையும் விட்டுச்செல்லும் இரு தத்துவத்தின் முன்
ஏன் உறைந்ததில்லை ஒரு நிகழ்கணம்
‘அப்பா’ என என் குரல் துணுக்குறுகிறது
உறைந்த யாவும் கண்ணீர் திவலையாகக் கரையமெனில்
என் மேய்ப்பனே
உன் வயல் வெளியில் ஒரு செம்மறியாடு
ஒரு சிறு பறவை[/one_half]
[one_half_last][/one_half_last]