[one_half]பெருங்கடல் சுற்றி வந்து
சப்திக்கிறது ஒரு சிறிய குருவி
அதன் சிறு இதயம்
என் முரட்டு தசைகளைப்
பயணமாய் இயக்குகிறது
அதுவன்றி
இன்னபிற உண்மையான நிகழ்வுகளில்
ஆவேசம் மறைத்து இறைஞ்சுகிறது எனதுயிர்
ஒரு ஓவியம்
தொட்டுத்தொட்டு
விலக்குகிறது தன் தூரிகையை
நானோ பாசி படிந்த நீர்க்கரையில்
பிடிமானமற்று உழல்கிறேன்
கைகள் எட்டும் தூரத்தில் விடுதலையின்
விரிந்த விழிகள்
அதன் உட்புறமாக நான் நீந்த வேண்டும்
உண்மையை விரித்துக் கூறுவதெனில்
நீண்ட யுகங்களின் பிடியில் தப்பிக்க
சிறந்த உபாயம் ஒன்றை முயற்சிக்கிறேன்
ஆயினும் அத்தனை வாக்குறுதிகளிலும்
தொடுவானம் நிலத்தைக் கைவிட்டது
எனது கையில் தானியக் கொத்து
அதை ஓடும் நதியில் வீசுகிறேன்[/one_half]
[one_half_last][/one_half_last]