[one_half]இரவையும் பகலையும்
கடமையென போர்த்தி
உறங்குகிறான் மகன்
எந்த மரங்கள் அவனுக்கு
பாடப் புத்தகங்களையும் கனிகளையும்
வழங்குகிறதோ
எந்தப் பறவையை தான் பறப்பதற்காக
அவன் தேர்ந்து கொண்டானோ
பொதுவான அவனது அச்சம்
வனவிலங்குகளைப் பற்றியதாக இருக்கலாம்
நான் அவற்றை நகரும்
பொம்மைகளாக்கித் தந்து ஆசுவாசமடைகிறேன்
அவனது சிறிய உலகத்தில்
வந்து அடைபட்டுக்கொண்டே இருக்கின்றன
வெளியே அலைபடும் ஆயிரமாயிரம் சமிக்ஞைகள்
அவனோ யாவற்றையும்
உயிருள்ளது அற்றது என
பிரித்தபடி இருப்பது தெரிகிறது
அந்நேரத்தில் வாஞ்சையுடன் இடும்
முத்தங்களை உறக்கத்திற்கு எடுத்துச்செல்ல
அவன் பேசுவதன் அர்த்தம் விளக்க
கேள்விகளைத் தொடுப்பது
நாம் செய்வது போதுமானதாயில்லைதான்
அவனுக்கு ஆடைகள் வழங்கும் உலகத்தையும்
அவன் சமூகத்தைச் சீர்படுத்துபவர்களையும்
கண்டடையும் பருவத்தில் எனக்குத் தெரியும்
பல்லாயிரம் இரவுகளையும் பகல்களையும்
சுருக்கி என் முதுமைக்குப் பரிசளிப்பான்.
[/one_half][one_half_last] [/one_half_last]