[one_half]வெயிலை வேலைக்கு அமர்த்தி
அதன் செலவுக்குப் பணம் கொடுப்பது
அதிகப்படியான காரியம்
உதவாது என்று சொன்னார்கள்
வெயில் வருகின்ற இதம் போதும்
இருந்து சோம்பி விடைபெற்றாலும் சரிதான்
வெயிலைக் குறை சொல்வது
எங்குல தெய்வத்திற்கு ஆகாது என மறுத்துவிட்டேன்
என் வெயிலோடு வெயிலாய்
வீதிக்கும் போய்க்கொள்வேன்
இரவு வந்தால் பிரிவு வரும்
கருமையும் எங்குல தெய்வத்திற்குப் பிடிக்காது
ஆகவே விடியலில் விரைந்து வரவேண்டி
வெயிலை வீட்டிற்கு
அனுப்புவது வழக்கமாயிற்று
ஆனாலும் அதன்பாட்டிற்கு வரும் போகும்
வெயிலைக் கட்டிவைத்து ஆகுமா
ஒரு நாள் பனிச் சிகரத்தில்
இருப்பதாகச் சொல்லிவிட்டுப் போனது
பிறகு வரவேயில்லை
வெயிலை அழைத்துவர ஆள் அனுப்ப
போனவர்கள் வெயிலோடு போனவர்கள்தான்
அலைந்து திரியும் வெயிலுக்கு
வீடு திருப்புதல் பற்றிப் பேச எப்படித்தான் முடிகிறது[/one_half]
[one_half_last][/one_half_last]