[one_half]கனவை விரித்து மழை பிடித்தேன்
தவறிவிழுந்த நட்சத்திரங்களை
விரல் நகங்களில் பதித்தவன்
உனது வாசலைத் தட்டுகிறான்
மேலும் சிலதுளிகள் உன் தொட்டிக் கத்தாழைக்கு
அழைப்பு மணி ஓசையில்
பூனைகள் எட்டிப் பார்த்து
கொட்டாவியுடன் உடலை நெட்டுயிர்க்கின்றன
இந்த வீதிதான் இது போலத்தான்
வெகுகாலத்திற்கு முன்பு நடந்ததாக
ஒருவன் எழுதியிருந்தான்
அந்தப் பிரதியும் தொலைந்துவிட்டது
நட்சத்திர விரல்களுடன்
நான் உனக்கு எழுதுவது
வானத்தில் மீதான ஒரு நெடுங்கனவை
இப்போதுதான் எட்டிப் பார்க்கிறாய்
என் விரல்களில் இருந்து பரவி
சொற்களாய் மின்னும் நட்சத்திரங்களை
மழைநாளில் தேடுவது வீண்
உனது பூனைகள் அலறும்
வாசலில் இருந்து திரும்புகிறேன்
தொலைந்த பிரதியான உன்முகம்
நிர்மலமற்ற வானம்போல்
ஏன் இருண்டிருக்கிறது.[/one_half]
[one_half_last][/one_half_last]