[one_half]இந்தக் கோடையின் நிலம்
ஒரு காதலைக் கைவிட்டிருக்கிறது
அதன் பருவம் நம்பிக்கைகளின்
நீர் வீழ்ச்சியை உலரப் போட்டிருக்கிறது
ஒரு வகை தானியம் இனி விளையவும் செய்யாது
வெப்பத்தின் கைதிருப்பல்கள்
உடலின் நீர் நிலைகளை தூர்க்க
பொய்கள் பதமாக சமைக்கப்படுகின்றன
உடலில் வற்றும் நீர் கடலில் சேர
உப்புக் காற்றில் சிப்பிகள் மணற்கரையில்
காய்கின்றன
வியர்க்கும் வார்த்தைகளை தூது விட்டிருக்கிறாய்
மழை கால வாக்கியங்களில்
உன் சேகரிப்பு எனை வந்தடையும் முன்
உச்சி வெயில் அவசரத்திலிருக்கிறது
கோடையின் நாங்காம் ஜாமம் குளிரில்
நீ என் கனவில் இருக்கிறாய்
காணும் எல்லாம் கனவுதான் என்றாலும்
இந்தக் கோடைகாலம் அவ்வளவு
நிஜமாய் சோம்பலில் தள்ளியிருக்கிறது
தாகம் என்று அனுப்பாதே
பூமி இப்போதுதான் சூரியனுக்கு
அருகில் இருக்கிறது.[/one_half][one_half_last] [/one_half_last]